இறுதி கட்ட யுத்தத்தின் போது இரசாயன குண்டு தாக்குதல் பிரயோகிக்கப்படவில்லை என்றும் மூன்று இலட்சம் தமிழர்களை விடுதலை புலிகள் அமைப்பு பணய கைதிகளாக வைத்திருந்த போது எங்கு சென்றீர்கள் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்தின் போது உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்ட ஒரு சில விடயங்களை மேற்கோள்காட்டி உரையாற்றுகையில் சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடும் கருத்து அடிப்படையற்றது.யுத்தத்தில் இரசாயன குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடுவது அடிப்படையற்றது.
இறுதி கட்ட யுத்தத்தின் போது இரசாயன குண்டுத்தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது பல அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படையினரால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. 295,000 தமிழர்களை பாதுகாத்தே இறுதிகட்ட யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
விடுதலை புலிகள் அமைப்பு 3 இலட்சம் தமிழர்களை பணய கைதிகளாக வைத்திருந்த போது இவர்கள் எங்கு சென்றார்கள்.இன அழிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு இவர்கள் தான் தொடர்ந்து முரண்பாடுகளை ஏற்படுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.