கடுமையான சட்டங்களை ஏற்படுத்தியாவது தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் விபத்துக்களின்போது வழக்கு நடவடிக்கைகள் இல்லாமல் காப்புறுதி நிதியத்தின் ஊடாக நட்டஈடு பெற்றுக்கொடுக்கும் முறையொன்றை அமைப்போம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார வாரத்தின் ஆரம்ப நிகழ்வு பண்டாரநாயக்க ஞாகார்த்த மாநாட்டு மண்டப்பத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரம் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார வாரமாக அமைச்சரவையினால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. தொழில் புரியும் மக்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பில் போதுமான கவனம் செலுத்தாவிட்டால் பொருளாதாரத்தின் முழுமையான செயல்திறனை அடைந்துகொள்ள முடியாமல்போகும்.
தொழில் விபத்துக்கள் மற்றும் நோய்கள் காரணமாக உலகம் பூராகவும் மனித மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்படுவது பாரிய பாதிப்பாகும். தொழில் விபத்துக்கள் மற்றும் நோய்கள் காரணமாக அனைத்து நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நூற்றுக்கு 4வீதமளவில் வீணாகுவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டில் தொழில் விபத்துக்களில் மாத்திரம் ஒவ்வொரு வருடமும் தொழில் புரியும் மனித நாட்கள் 5 இலடசத்துக்கும் அதிகம் வீணாகின்றன.
நிர்மாணத்துறையில் ஏற்படும் விபத்துக்களின் மரணம் 20க்கும் அதிகம் பதிவாகின்றன. உயர்ந்த இடங்களில் தொழில் செய்யும்போது முறையான பாதுகாப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்காமையாலே அதிகமான விபத்துக்கள் இடம்பெறுகின்றன.
இதன் மூலம் ஏற்படும் மனித மற்றும் பொருளாதார பாதிப்பு நிதி அடிப்படையில் பாரியதாகும். அதனால் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பாக முறையாக கவனம் செலுத்தாமல் பொருளாதார செயல்திறனை பூரணமாக அடைந்துகொள்ள முடியாது.
அத்துடன் தொழிலாளர்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டால் அதற்குரிய நட்டஈட்டை பெற்றுக்கொள்ள, நட்டஈட்டு ஆணையாளர் காரியாலயத்துக்கு சென்று, வழக்கு தொடுத்து பல ஆண்டுகள் காத்துக்கொண்டிருக்கவேண்டும்.
அதனால் அரசாங்கம் என்றவகையில் அவ்வாறான நிலைமைக்கு ஆளாகும் அனைத்து தரப்பினரையும் பாதுகாக்கும் வகையில் சமூக பாதுகாப்பு வலையொன்றை ஏற்படுத்துவோம். வழக்கு நடவடிக்கைக்கு செல்லாமல் நட்டஈடு பெற்றுக்கொள்ளும் முறையொன்றை, காப்புறுதி நிதியத்தின் ஊடாக நட்டஈடு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்.