மலையகத் தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் மேலும் எவ்வாறு இணைப்பது என்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேண்டுகோளுக்கு இணங்க புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இந்திய மக்களால் வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை பொறுப்பேற்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் கலந்துகொண்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மலையகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களில் சிலர் இலங்கை சமூகத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளதாகவும், வேறு சிலர் அங்கு தோல்வியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
23 வருடங்களுக்கு முன்னர் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இந்த மருந்துப் பொருட்களை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளித்ததுடன், ஜனாதிபதி அதனை, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் மருந்துப் பொருட்களை கையளித்தார்.
பெருந்தோட்ட வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சுக்குக் கீழ் கொண்டுவரும் அதேவேளை, தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்தியை உறுதி செய்வதற்கு தாம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய மக்களைப் போன்று மலையகத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் மக்களும் தமது சொந்த வீட்டில் வசிக்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கும் மற்றும் அவற்றில் வீடுகளை அமைக்கும் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் அரசாங்கத்தின் ஆதரவு வழங்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
கல்வியை முடித்த பின்னர் இளைஞர்கள் தோட்டங்களை விட்டு வெளியேறும் போக்கு காணப்படுவதாகவும், அதன் காரணமாக ஆபத்தில் உள்ள பெருந்தோட்டப் பொருளாதாரத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, பெருந்தோட்ட இளைஞர்கள் மற்றும் நாட்டின் அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.