கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வை வரியற்ற வணிக வளாகம் ஒன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் திறக்கப்பட உள்ளது.
இந்த வளாகத்தின் பெரும்பாலான அடிப்படைப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரியத்பந்து விக்ரம, தெரிவித்துள்ளார்.
தீர்வை வரியற்ற வணிக வளாகத்தை இயக்கும் நிறுவனம் உலகின் மூன்று முன்னணி இயக்குனர்களை கொண்டுள்ளது என்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் இதுவே மிகப்பெரிய தீர்வை வரியற்ற வணிக வளாகம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையினால் இந்த சுங்க வணிக வளாகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லையென கலாநிதி பிரியத்பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள முஸ்தபா வளாகத்தை விட பெரியதாக இருக்கும் கொழும்பு துறைமுக நகரத்தின் தீர்வை வரியற்ற வணிக வளாகம் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.