வியட்நாமிய மீட்புக் கப்பல் ஒன்று ஜப்பானியக் கப்பலுடன் இணைந்து அனர்த்தத்துக்கு உள்ளான படகில் பயணித்த 300க்கும் மேற்பட்ட இலங்கையர்களை நேற்று செவ்வாய்க்கிழமை கரைக்கு அழைத்து வந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.
வியட்நாமில் இருந்து வரும் செய்திகளின்படி, கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு கப்பல் ஒன்று இவர்களை மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் ஜப்பானிய சரக்குக் கப்பலான ஹீலியோஸ் லீடர், பாதிக்கப்பட்ட கப்பலை அணுகி, 305 இலங்கை குடிமக்கள் மற்றும் மாலுமிகளை கப்பலில் ஏற்றிக்கொண்டு, வியட்நாமிய கடலோரக் காவல்படையினரிடம் சென்றது.
அங்கு வியட்நாமிய படையினர், ஹெரியோஸ் லீடர் கப்பலில் வந்த 300 க்கும் மேற்பட்ட இலங்கையர்களை பொறுப்பேற்றனர்.
இதேவேளை இந்த இலங்கையர்கள், வானூர்தி மூலம் மியன்மாருக்கு சென்று அங்கிருந்து படகு மூலம் கனடாவுக்கு செல்லும்போதே அவர்களின் படகு அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்தநிலையில் குறித்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.