பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பாக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோரிடம் இருந்து, குறித்த கைதிகள் தொடர்பான அறிக்கை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தற்போது விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 15 பேரும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 76 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்டு, சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை 16 ஆகும்.
அவர்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.