நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் முரண்பாடுகள் காணப்படுமாயின் அது குறித்து கலந்துரையாடி தீர்வு காணப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அரசாங்கத்துடன் இணைய மாட்டார் எனவும் அதன் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வாக்கெடுப்பில் அரசை எதிர்த்து வாக்களிக்கத் தவறி, அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து கட்சி நிலைப்பாட்டையும், கட்டுப்பாட்டையும் மீறிய காரணத்தால் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.
அத்துடன், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை அரசியல் குழு எடுக்கும் என்றும் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.