35 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் இலங்கைக் குற்றவாளியின் முன்கூட்டிய விடுதலை விவகாரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசாங்கத்துக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர் விடுவிக்கப்பட்டவுடன் மீண்டும் இலங்கை செல்ல விரும்புவதாகக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அவர் அரசால் தீர்மானிக்கப்படும் பொருத்தமான இடைத்தங்கல் முகாமுக்கு மாற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
2018 கொள்கையின் அடிப்படையில் மனுதாரரின் முன்கூட்டிய விடுதலையை மறுத்ததற்கு எதிராக மாநிலத்தின் 2021 ஆம் ஆண்டு உத்தரவை எதிர்த்து மனுதாரர் ராஜன் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதியரசர்கள் அபய் எஸ். ஓகா மற்றும் ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மனுதாரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சுமார் 35 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.
முன்கூட்டிய விடுதலைக்கான மனுதாரரின் வேண்டுகோளை அரசு பரிசீலித்து நிராகரித்தது, அவர் செய்த குற்றத்தின் தீவிரம் மற்றும் இணை குற்றவாளிகளின் விசாரணைகள் பிரிக்கப்பட்டு, முன்கூட்டியே விடுதலை செய்வது நடத்தைக்கு இடையூறாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.