வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளுகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியை விரைவாக வழங்குமாறு அரச அச்சகத் திணைக்களம் திறைசேரியின் செயலாளரிடம் எழுத்து மூலமாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
நிதி விடுவிக்க வேண்டும் அல்லது நிதி விடுவிப்பு தொடர்பில் உத்தியோகபூர்வமாக ஒரு தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என அரச அச்சகத் திணைக்களம் திறைசேரியிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி நெருக்கடி பிரதான தடையாக உள்ளது எனவும் நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண திறைசேரி வெளிப்படையாக ஒரு அறிவிப்பை விடுக்க வேண்டும் என்றும் அரச அச்சகத் திணைக்கள தலைவர் கங்கானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.
நிதி விடுவிப்பு தொடர்பில் கடந்த 08 ஆம் திகதி திறைசேரிக்கு அனுப்பிய கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளுக்கு கூட இதுவரை போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நிதி விடுவிப்பு தொடர்பில் அரச அச்சகத் திணைக்கள தலைவர் திறைசேரிக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் நகல் ஒன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.