குருந்தூர்மலையில் 632 ஏக்கர் காணிகளை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்க முயற்சிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரனை முல்லைத்தீவு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த 21ஆம் திகதி குமுழமுனை மற்றும், தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதற்காக கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரனை பொலிசார் விசாரணைக்கு அழைத்து கைது செய்தனர்.
அவரை நீதிமன்றில் முன்னிறுத்திய பொலிசார் அடையாள அணிவகுப்பொன்றை கோரிய நிலையில், 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றில் விசரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் லோகேஸ்வரனை சிறைக்குள் தள்ளவேண்டும் என்ற தீய நோக்குடன் பொலிசார் அடையாள அணிவகுப்பை உபயோகித்திருக்கின்றார்கள் என, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் சுட்டிக்காட்டி கடுமையான வாதத்தில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்று லோகேஸ்வரனை விடுதலை செய்ததுடன், இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளது.