அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை தற்போதைய வடிவத்தில், நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ள 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு, பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் வகையில் மட்டுமே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இல்லையெனில், தற்காலிகமாக அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
“13வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே, நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளது.
எனவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் திருத்தமானது, ஒற்றையாட்சித் தன்மையை பாதிப்பதாக இருக்க கூடாது.
அரசியலமைப்பை துண்டு துண்டாக மாற்றுவதை விட ஒட்டுமொத்த மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்குவதை தமது கட்சி எதிர்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, இத்தருணத்தில் உறுதித்தன்மையை பேணுவதற்கும் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டுவதற்கும் ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரங்கள் தேவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸநாயக்க தெரிவித்தார்.
“1988/89ல் ஜே.வி.பியின் கிளர்ச்சியை ஜனாதிபதி ஆர்.பிரேமதாச 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்களைக் கொன்று அடக்கினார்.
நிர்வாக அதிகாரங்கள் அவருக்கு இயல்பு நிலையை கொண்டுவர உதவியாக இருந்தது.
பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி, விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக நசுக்கினார்.” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.