deepamnews
இலங்கை

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் வாக்கெடுப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெறுகின்ற நிலையில், வியாழக்கிழமை (6) இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இந்த விடயத்தில் அங்குள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு சிறப்பாக செயற்பட்டு நாட்டை பாதுகாப்பார்கள் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஆமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு  இடம்பெற்ற போது, ஜெனிவா விவகாரம் குறித்தும் இலங்கைக்கு எதிரான உத்தேச புதிய தீர்மானம் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணையில் வெளிக்கள விசாரணை பொறிமுறை முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை மேலும் வலுப்படுத்தவும், அதனூடாக இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள் மற்றும்  பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டப்பட்டு சர்வதேச பொறிமுறையொன்றின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தவும் புதிய தீர்மானத்தில் பரிந்துரைகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படும்.

கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை  எதிர்க்கொண்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தீர்மானங்கள் மீதான கூட்டு இணக்கப்பாடுகளிலிருந்து தன்னிச்சையாக விலகி உள்ளக விவகாரங்களில் தலையிட கூடாது என்றும் எதுவாக இருந்தாலும் உள்ளக நீதிமன்ற கட்டமைப்பில் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் கூறியது. இதனால் இதுவரைக்காலமும் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வாய்ப்புகள் என்பவை கேள்விக்குறியாக்கப்பட்டதாக சர்வதேச நாடுகள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தன.  

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகியது.  அன்றைய தினமே இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையின் சாராம்சம் வாசிக்கப்பட்டு, விவாதமும் இடம்பெற்றது. பின்னர் பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகள் இணைந்து ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் தயாரித்துள்ள புதிய தீர்மானத்தின் வரைபை பகிரங்கப்படுத்தியது.

இதனை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை பல்வேறு நடவடிக்கைளை தனது இராஜதந்திர மையங்கள் ஊடாக முன்னெடுத்திருந்தது. இதன் பின்னரே திருத்தங்களுடன் கூடிய 2 ஆவது வரைபு வெளியிடப்பட்டு, மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த புதிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பே நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் ஆண்டில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி ரணில்

videodeepam

இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் தமிழகத்தில் சிக்கியது! –  இருவர் கைது

videodeepam

அதானி நிறுவன பங்குகள் வீழ்ச்சி- இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாதிப்பில்லை என்கிறார்  அலி சப்ரி

videodeepam