‘வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்கள்’ என்ற குடையின் கீழ் வரும், 30 ஆசியப் பொருளாதாரங்களில் இலங்கை இந்த ஆண்டு அதிக பணவீக்கத்தைக் கொண்ட நாடாக விளங்கும் என, சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
‘உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்’ என்ற தலைப்பிலான ஒரு ஆவணத்தில், இலங்கையின் வருடாந்த சராசரி பணவீக்கம் இந்த ஆண்டு 48.2 சதவீதமாக உயரும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
கடந்த 2021 இல் இலங்கையின் சராசரி பணவீக்கம் 6 சதவீதமாக இருந்த நிலையிலேயே இந்த ஆண்டு பணவீக்கம் பலமடங்கு அதிகரித்துள்ளது.
2023 இல் பணவீக்கம் சராசரி 29.5 சதவீதமாகக் குறையும் என்றும், சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
2027ல் இது 5 சதவீதமாக குறையும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ள போதும், 2025-2026 வரையிலான மூன்று வருட காலப்பகுதியில் இலங்கையின் வருடாந்த சராசரி பணவீக்கம் எப்படி இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணிக்கவில்லை.
இலங்கையின் கடந்த வருட இறுதி பணவீக்கம் 12.1 வீதமாக இருந்ததாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதி பணவீக்கம் 69.8 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அது கணித்துள்ளது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் 9.1 சதவீதமாகக் குறையும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் வகைப்படுத்தப்பட்டுள்ள, 30 ஆசிய பொருளாதாரங்களில், அதி உச்ச சராசரி பணவீக்கத்தைக் கொண்ட நாடாக இலங்கை விளங்குகிறது.
அதையடுத்து மியான்மர் 16.2 சதவீதம், லாவோஸ் 15 சதவீதம், பலாவ் 12.2 சதவீதம் மற்றும் டோங்கா8.5 சதவீதம் என பணவீக்கம் பதிவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.