ஆழமான சீர்திருத்தங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் இலங்கை அதிகாரிகளின் விரிவான கடன் தீர்ப்பு செயல்முறையின் முன்னேற்றம் ஆகியவற்றைப் பொறுத்தே, இலங்கைக்கான புதிய சலுகை நிதியுதவிகள், கிடைக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன வலியுறுத்தியுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தெற்காசிய பிராந்தியத்திற்கான உலக வங்கியின் உப தலைவர் மார்ட்டின் ரைசர் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவை உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களின் போது சந்தித்தார்.
இதன்போது, இலங்கையின் தற்போதைய கடன் தகுதி தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும், உலக வங்கியின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி மூலம் நிதியுதவி பெறுவதற்கு இலங்கைக்கு இனி உரிமை இல்லை என்று அதன்போது, வலியுறுத்தப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அபிவிருத்தி சங்கத்துடனேயே இணைந்து செயற்பட வேண்டும் என்றும், அதுவே இலங்கைக்கு சலுகைக் கடன்களைப் பெற்றுக்கொடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே பட்டியலிடப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளில் நீடித்த முன்னேற்றங்களே எதிர்காலத்தில் இலங்கை சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் உதவிகளைப் பெறுவதற்கு வழி வகுக்கும் என்றும், உலக வங்கிப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.