உக்ரைன் தனது கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து விலகுதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
க்ரைமியா பிராந்தியத்தின் செவஸ்ரோபோல் பகுதியிலுள்ள கருங்கடல் கடற்படைத்தளம் மீது உக்ரைன் பாரிய ஆளில்லா விமானத் தாக்குதலை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டி சில மணி நேரத்தில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உக்ரைன், ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டதை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள அதேவேளை ரஷ்யாவின் இந்த நகர்வு ஏற்கனவே ஊகிக்கப்பட்ட ஒன்றென உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி கூறியுள்ளார்.
இதனிடையே தானிய ஏற்றுமதிக்கான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கு தவறான சாக்கு போக்கு காரணங்களை ரஷ்யா கூறுவதாக உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரித்தானிய படையினரும் இந்த தாக்குதலில் பங்கெடுத்துள்ளதாக ரஷ்யா குற்றஞசாட்டியுள்ளதுடன், இதற்கான ஆதாரங்களை ரஷ்யா முன்வைக்கவில்லை என மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் கூறியுள்ளன.
கடந்த மாதம் ஐரோப்பாவிற்கான நோர்ட் ஸ்றீம் எரிவாயு குழாய்களை தகர்த்த பின்னணியிலும் பிரித்தானியப் படையினர் உள்ளதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
எனினும் ரஷ்யா தவறான கருத்துக்களை பரப்புவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.