கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த விசாரணை நடவடிக்கைகளுக்காக சிரேஷ்ட அதிகாரிகள் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்த குழுவினூடாக தயாரிக்கப்படும் அறிக்கை, நீதி அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 201 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ நேற்று தெரிவித்திருந்தார்.
கட்டடமொன்றை ஆக்கிரமித்திருந்த கைதிகள் குழு நேற்று பிற்பகல் பொலிஸாரிடம் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, மோதல் சம்பவத்தின் போது தப்பிச்சென்ற 30 கைதிகளை தேடி சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலின் பின்னர் கைதிகள் பலர் தப்பிச்சென்றுள்ளனர்.
மோதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 547 கைதிகள் இருந்துள்ளனர்.
கைதிகள் நீராடுவதற்காகப் பயன்படுத்தும் இடத்திலிருந்த வாளியொன்றை பெற்றுக்கொள்வது தொடர்பாக காலி பகுதியைச் சேர்ந்த கைதியொருவர் மற்றும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கைதியொருவர் இடையே கைகலப்பு உருவாகியுள்ளது.
இதனையடுத்து மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதி அமைச்சரிடம் அறிக்கையொன்றை கோரியுள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த ஜுன் மாதம் 29ஆம் திகதியும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இதன்போது சுமார் 400 கைதிகள் தப்பிச் சென்றதுடன் ஒரு கைதி உயிரிழந்திருந்தார்.
கைதி ஒருவரிடமிருந்து புகையிலை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஆலோசகர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக வலுவடைந்திருந்தது.