பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கல் செய்யும்” என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தரும் பாஜக அரசின் சட்டம் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான தீர்ப்பாகும். நீதியின் பெயரால் இழைக்கப்பட்ட மாபெரும் உச்சபட்ச அநீதியாகும்.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் இந்த சட்டம் செல்லாது என்று தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் தற்போது இந்தச் சட்டம் செல்லும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளைப் பல ஆண்டுகளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் கிடப்பில் போட்டிருந்தது. தலைமை நீதிபதியாக லலித் பொறுப்பேற்றதற்குப் பிறகுதான் இதற்கான அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இந்தச் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ள நீதிபதி ரவீந்திர பட் மற்றும் தலைமை நீதிபதி யு.யு. லலித் ஆகியோரும்கூடத் தங்களின் தீர்ப்பில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றே கூறியுள்ளனர். இது சமூக நீதிக்கு எதிரான நிலைப்பாடே ஆகும் என தெரிவித்துள்ளார்.