deepamnews
இலங்கை

புதிய சட்டத்தை தயாரித்து தேர்தலை காலம் தாழ்த்த அரசாங்கம்  திட்டமிடுகிறது – டிலான் பெரேரா

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தின் பிரகாரம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்த முடியாது. எனவே புதிய சட்டத்தை உருவாக்குவதாகக் குறிப்பிட்டு, உள்ளுராட்சி தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் மிகவும் சூட்சுமமாக திட்டமிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குற்றஞ்சாட்டினார்.

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உள்ளுராட்சி தேர்தலை உரிய நேரத்தில் நடத்துமாறு வலியுறுத்தி பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எதிர்க்கட்சிகள், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் என 23 தரப்பினர் கையெழுத்திட்டுள்ள ஆவணத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளோம். இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் தேர்தலலை உரிய காலத்தில் நடத்துமாறு வலியுறுத்தியிருக்கின்றோம்.

இவற்றை மீறி உள்ளுராட்சி தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு முயற்சிக்கப்படுமாயின் அதற்கு எதிராக பாராளுமன்றத்திற்குள்ளும் , வெளியிலும் , சர்வதேச தரப்பினருடனும் மற்றும் நீதிமன்றத்தின் ஊடாகவும் நடவடிக்கை எடுப்போம். தேர்தல் ஆணையாளருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது , தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்திற்கமைய எந்த வகையிலும் உள்ளுராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முடியாது என தெளிவாகக் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு காணப்படும் ஒரேயொரு வழிமுறை புதிய தேர்தல் சட்டத்தை தயாரிப்பதாகும். தற்போது அரசாங்கம் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அரசாங்கம் ஏதேனும் சூழ்ச்சிகளில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

தேர்தல்களை சுயாதீனமாக நடத்துவதற்காகவே சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஆனால் ஆணைக்குழுவிலுள்ள சில அதிகாரிகளால் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களத்திற்கு இடையூறு விளைவிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. எனவே இவ்விடயத்தில் புரிந்துணர்வுடன் செயற்படுமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

இளைஞர், யுவதிகளுக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவிப்பு!

videodeepam

எமது நிலம் எமக்கு வேண்டும்-வெள்ளாங்குளம் பகுதியில் மக்கள் போராட்டம் முன்னெடுப்பு

videodeepam

பங்களாதேஷுக்கு 50 மில்லியன் டொலரை மீள செலுத்தியது இலங்கை

videodeepam