தமிழ் மக்கள் சார்ந்து நிறைவேற்றப்படவேண்டிய 10 கோரிக்கைகளை கனேடியத் தமிழர் பேரவை முன்வைத்திருக்கும் நிலையில் அதுகுறித்து அவதானம் செலுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, தம்மோடு இணைந்து பணியாற்றுவதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளைச்சேர்ந்த புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கும் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் அழைப்புவிடுத்துள்ளார்.
வட, கிழக்கு தமிழ்மக்கள் சார்ந்து நிறைவேற்றப்படவேண்டிய 10 கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்று புலம்பெயர் தமிழர் அமைப்பான கனேடியத் தமிழர் பேரவையினால் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் நீதியமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டில் நிலவிய இன, மத, மொழி ரீதியான வேறுபாடுகளால் கடந்த காலங்களில் நல்லிணக்க செயன்முறை வெகுவாகப் பாதிப்படைந்திருக்கின்றது.
இருப்பினும் தற்போது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகள் நீதியமைச்சினால் தீவிர முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எதுஎவ்வாறிருப்பினும் பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமையளிக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார்.