ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைக்கான சதித் திட்டத்தில் பங்குபெற்ற குற்றத்துக்காக 31 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஆறு பேர் உச்ச நீதிமன்றத்தால் நவம்பர் 11 அன்று விடுவிக்கப்பட்டனர். தன்னுடைய சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி பேரறிவாளனின் விடுதலைக்கு மே 18 அன்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இப்போது அந்தப் பயனை அதே வழக்கில் தண்டிக்கப்பட்ட பிறருக்கும் அளித்தது.
இந்த நிலையில், ‘இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பை நேரடியாக எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்த பின்னரும், மத்திய அரசை ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் உரிய கோரிக்கை மனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நடைமுறை தவறு, சிக்கலால் மத்திய அரசால் ஒரு தரப்பாக வழக்கில் பங்கெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதன் காரணமாக உரிய வாதத்தையும் நீதிமன்றத்தில் எடுத்து வைக்க முடியவில்லை.
அதேபோல், வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்காத காரணத்தால்தான், அது தொடர்பான முக்கியமான ஆதார, ஆவணங்களை வாதமாக எடுத்து வைக்க இயலாமல் போனது. மத்திய அரசு தன் தரப்பு வாதத்தை எடுத்துவைக்காத காரணத்தால்தான் இந்த 6 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ என சீராய்வு மனுவில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.