புவி வெப்பமயமாதலின் தாக்கத்தை குறைப்பதற்காக வடமாகாணத்தில் பாரிய பசுமை ஹைட்ரஜன் திட்டம், மேம்படுத்தப்பட்ட நீர் முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் மீள் காடுவளர்ப்புத் திட்டம் என்பவற்றை ஆரம்பிப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
மன்னார்,தம்பபவனி காற்றாலை மின்உற்பத்தி நிலையத்திற்கு நேற்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, இந்நாட்டு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான திட்டங்கள் தொடர்பாகவும் இதற்குப் பொறுப்பான நிறுவனமான இலங்கை மின்சார சபை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அதிகார சபையுடனான கலந்துரையாடலின் போது இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டங்கள் மற்றும் ஹைட்ரஜன் திட்டங்களுக்கு விரைவாக மாற வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி, இங்கு வலியுறுத்தினார்.
கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை எதிர்காலத்தில் முன்னெடுக்கவும் மீன்பிடி படகுகளுக்கான பசுமை ஹைட்ரஜன் வலுசக்தி முறையை உடனடியாக அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திலும் வடக்கின் பொருளாதாரத்திலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வட மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கடல்நீர் சுத்திகரிக்கும் திட்டம் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. இதன் ஊடாக எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய வரட்சியான காலநிலைக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க முடியும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் வன வளம் மற்றும் நீர் மூலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.