deepamnews
இந்தியா

கர்நாடக முச்சக்கரவண்டியில் மர்மப் பொருள் வெடிப்பு

கர்நாடக மாநிலம் மங்களூரு – நாகுரி பகுதியில் முச்சக்கரவண்டியில் மர்மப் பொருள் வெடித்த சம்பவம் பாரிய பாதிப்பை ஏற்படுத்த பயங்கரவாதிகள் தயாரானதற்கான அறிகுறியாக தென்படுவதாக கர்நாடக பிரதி காவல்துறை ஆணையாளர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

நாகுரி நகரப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை முச்சக்கரவண்டியொன்றில் மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் அதில் பயணித்த சாரதியும், பயணியும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வெடிப்பு ஏற்பட்டு வாகனத்தில் தீப்பிடித்த மாத்திரத்தில் இருவரும் அதிலிருந்து வெளியேறியுள்ளனர். இருந்தபோதும், தீச்சுவாலைகள் காரணமாக எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிரேஸ்ட காவல்துறை அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வுகளை முன்னெடுத்தனர்.

அப்போது முச்சக்கரவண்டியில் இருந்து சமையலுக்கான அடுப்பு ஒன்று கைப்பற்றப்பட்டது. குறித்த அடுப்பு வெடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

முச்சக்கரவண்டியில் வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது வெடி விபத்து ஏற்பட்டதா அல்லது அடுப்பு வெடித்ததால் தீப்பிடித்ததா என்பது உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முச்சக்கரவண்டியில் கைப்பற்றப்பட்ட அடுப்பில் கம்பிகள் கொண்ட மின்சுற்று அமைப்பு இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில், முச்சக்கரவண்டியில் மர்மப் பொருள் வெடித்த விவகாரம் விபத்து அல்ல என கர்நாடக பிரதி காவல்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார். மர்ம பொருள் வெடித்தமை தற்செயலாக நடைபெற்ற விபத்து அல்ல.

பெரிய பாதிப்பை ஏற்படுத்த தீவிரவாதிகள் தயாரானமைக்கான எச்சரிக்கையாக தெரிகின்றது. இது தொடர்பாக மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன் கர்நாடக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முச்சக்கரவண்டியில் இருந்த அடையாள அட்டையை பறிமுதல் செய்த காவல்துறையினர் உயர்மட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த தடை

videodeepam

சித்தராமையா- டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி – முதலமைச்சர் பதவி இழுபறி

videodeepam

உலகின் மிகச் சிறந்த  தலைவர் பிரபாகரன் தான்! – நடிகை கஸ்தூரி புகழராம்

videodeepam