இலங்கை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும் என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நேற்று அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் சந்தித்த தருணத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பிளிங்கன் இந்த தகவலை வெளியிட்டார்.
அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இது தொடர்பான காணொளியை வெளியிட்டுள்ளது.
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான ராஜதந்திர உறவுக்கு அடுத்த வருடத்துடன் 75 அகவை பூர்த்தியாகின்றது.
இந்தநிலையில் அமெரிக்கா – இலங்கைக்கு அன்பளிப்பு, கடன் மற்றும் ஏனைய உதவிகள் என்ற வகையில் 240 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
இந்த உதவி திட்டங்கள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்று பிளிங்கன் உறுதியளித்தார்.
தமது சந்திப்பின் போது, உலக காலநிலை விடயங்கள், அதில் இலங்கைக்கான திட்டங்கள் மற்றும் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாக பிளிங்கன் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் கருத்துரைத்த, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்காவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடுகள், அதற்கான அமரிக்காவின் ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சர் அலி சப்ரி இலங்கை சார்பில் நன்றியை தெரிவித்தார்.