மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக்கிழமை (08) மாலை வரையான கடந்த 4 நாட்களாக கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதோடு, ஓரளவான பழையும், பலத்த சுழல் காற்றும் வீசிவருதை அவதானிக்க முடிகிறது.
பலத்த சுழல் காற்றினால், மாவட்டத்தின் பல இடங்களிலும், மரங்கள் முறிந்துள்ளதையும், மக்களின் இயல்பு வாழ்வில் சற்று தளம்பல் நிலமை ஏற்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது, புதன்கிழமை (07) இரவு 11.30 மணியளவில் சூறாவளியாக தீவிரமடைந்துள்ளதுடன் அதற்கு “மண்டோஸ்” என பெயரிடப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து கிழக்காக 370 கிலோ மீற்றர் தூரத்திலும், நெட்டாங்கு 9.2 பாகை வடக்காகவும், அகலாங்கு 84.6 பாகை கிழக்காகவும், சூறாவளி மையம் கொண்டுள்ளது.
இப்புயல் மேற்கு, வடமேற்குத்திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையை இன்று இரவு ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், மேகமூட்டமான வானம் காணப்படும்.
வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வட மாகாணத்திலும், மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில், 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மணிக்கு 50 தொடக்கம், 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று அவ்வப்போது வீசக்கூடும். மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மன்னார் முதல் காங்கேசங்துறை, மருகோணமலை மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களிலும், தென்மேற்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியங்களிலும், மீனவ சமூகத்தினரும் கடலில் பயணம் செய்வோரும், நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
குறித்த கடற் பிராந்தியங்களில் கடல் அலை 2.5 மீற்றரிலிருந்து, 3.5 மீற்றர் வரை எழக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான குளங்களின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளன.
அந்த வகையில் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 26 அடி 10 அங்குலமும், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 11அடி 9 அங்குலமும், வாகனேரிக்குளத்தின் நீரமட்டம் 15 அடியும், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11 அடி 7 அங்குலமும், கித்துள்வெவ குளத்தின் நீர்மட்டம் 7 அடி 2 அங்குலமும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீரமட்டம் 13 அடியும், வடமுனைக் குளத்தின் நீர்மட்டம் 8 அடி 7 அங்குலமும், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 23 அடி 8 அங்குலமும், தும்பங்கேணிக் குளத்தின் நீர்மட்டம் 12 அடி 6 அங்குலமுமாக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.