வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ள நிலைமையின் கீழ் அங்கு வாழும் பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் பால் பொருட்கள் உட்பட கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளின் மூலம் தமது வாழ்வாதாரத்தை பேணுவதற்கு மாடு மற்றும் ஆடுகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
எவ்வாறாயினும், அண்மையில் ஏற்பட்ட குளிரான வானிலை காரணமாக 1,800 மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ள நிலையில், இவற்றை வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தும் மக்கள் தற்போது மிகவும் அவல நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களை ஆராய்ந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்த நிலையில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் மோசமான வானிலையினால் உயிரிழந்துள்ளதாகவும், தொற்று நோயினால் அல்ல எனவும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, வட மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இறைச்சிக் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.