முட்டை இறக்குமதிக்கான சுகாதார பரிந்துரைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விநியோகத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ள போதிலும், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பரிந்துரை கிடைக்காமை காரணமாக அந்த நடவடிக்கை தாமதமடைந்துள்ளது.
இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடியாத நிலை காணப்படுவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும், அரச வணிகக் கூட்டுத்தாபனம் உரிய அனுமதியை கோரி கால்நடை உற்பத்தி திணைக்களத்திற்கு கோரிக்கை விடுத்திருந்த போதிலும் இதுவரை பதில் வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக முட்டைகளை இறக்குமதி செய்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ள முடியாதுள்ளது.
இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்யப்பட்டால் 40 ரூபா எனும் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய முடியும் என அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தற்போது சந்தையில் காணப்படும் முட்டைப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைக்கும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.