காதல் தகராறு காரணமாக நேற்று (17) கொழும்பு குதிரைப்பந்தய திடலில் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மூன்றாம் வருட மாணவியின் காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் களனி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் இளங்கலை மாணவர். நேற்று நண்பகல் 12 மணிக்கும் 1 மணிக்கும் இடையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
காதலியை கொலை செய்ய பயன்படுத்திய இரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் புத்தகப் பை என்பன அவரது வீட்டில் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஹோமாகம, கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த சதுரி ஹன்சிகா மல்லிகாராச்சி என்ற 24 வயதுடைய மாணவியே காதலனால் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகொலை செய்யப்பட்டவரின் பெற்றோர் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், கிரிவத்துடுவ பிரதேசத்தில் மருந்தகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். மூத்த மகளே கொல்லப்பட்டார். அவருக்கு ஒரு சகோதரி உள்ளார்.
நேற்று மதியம் 12.30 மணியளவில் இந்த மாணவி கொழும்பு குதிரைப் பந்தய திடலில் உள்ள சீமெந்து திண்டு மீது அமர்ந்து தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு காதலன் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிவிட்டான். இருவருக்குமிடையில் அண்மைக் காலமாக சுமுகமான உறவில்லையென்றும், 2 மாதங்களின் முன்னரே காதல் உறவை முறிப்பதாக யுவதி தெரிவித்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
யுவதி வேறு யாரையாவது காதலிக்கக்கூடாது என்றே கொலை செய்துள்ளார்.
அந்த பகுதிக்கு அருகில் வீதியை சுத்தம் செய்து கொண்டிருந்த ஒருவர் யுவதி படுத்திருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனேயே, பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்,. யுவதி உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
மாணவி விழுந்த இடத்தில் இரத்த வெள்ளமாக காணப்பட்டது. அந்த இடத்தில் இருந்து மாணவியின் புத்தக பை, மொபைல் போன், டைரி ஆகியவை பொலிசாரால் மீட்கப்பட்டன.
மேலும் காதலனுடையது என சந்தேகிக்கப்படும் மொபைல் போனையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், காதல் தகராறு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட ஹன்சிகா 2019 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.
இந்த கொலை தொடர்பாக சதுரி ஹன்சிகாவின் நெருங்கிய நண்பர்கள் பலரிடம் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் காதலன் குருந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.