இலங்கையில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் குப்புசாமி அண்ணாமலை உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய தலைநகர் புது டெல்லியில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்த குப்புசாமி அண்ணாமலை, தமிழக அரசியல், ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம் தொடர்பாக அவரிடம் எடுத்துரைத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரை கு.அண்ணாமலை உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில முக்கியஸ்தர்கள் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பில், மத்திய இணை அமைச்சர் எல் .முருகன், பாஜக-வின் தமிழக மாநில முன்னாள் தலைவர்களான சி.பி.இராதாகிருஷ்ணன், பொன். இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இதன்போது, இலங்கையில் 13 ஆவது சட்டத் திருத்தத்தை எவ்வித மாற்றமுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் , குறித்த விவகாரத்தில் இந்திய மத்திய அரசு தலையிட வேண்டும் எனும் கோரிக்கைகள் அடங்கிய மனு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கைத் தமிழர்கள் – தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.