ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் இரண்டாம் சந்தர்ப்பம் இதுவாகும்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு வருகைதரவுள்ளார்.
இந்த நிகழ்வு தொடர்பிலான ஒத்திகைகள் கடந்த சில தினங்களாக நடைபெற்றன.
ஜனாதிபதி இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து, அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு ஏற்ப, இன்றைய நிகழ்வை எளிமையாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், முப்படை மரியாதையும் அணிவகுப்பும் இடம்பெறாது எனவும், மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படாது எனவும் பாராளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.