சீனா – இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் உட்பட அனைத்து முக்கிய கடன் வழங்குநர்களிடமிருந்தும் தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகள் மற்றும் நிதி உத்தரவாதங்களைப் பெறுவதில் இலங்கை அதிகாரிகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை தாம் வரவேற்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் பிணையெடுப்புக்கான பணிக்குழாம் மட்ட உடன்படிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக்கு மார்ச் 20இல் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கையின் பிணையெடுப்புக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம் மட்ட உடன்படிக்கை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி எட்டப்பட்டது.
இந்தநிலையில், அனைத்து பாரிய இருதரப்பு கடன் வழங்குநர்களின் நிதியியல் உறுதிப்பாட்டை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்திற்கான, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரமானது, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட ஏனைய கடன் வழங்குநர்களிடம் இருந்து நிதியுதவியை ஊக்குவிக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.