deepamnews
இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு கூட பிணையுள்ளது, தொல்லியல் சார்ந்த சின்னங்களுக்கு எதிராக செயல்பட்டால் பிணை இல்லை – எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு கூட பிணையுள்ளது ஆனால் தொல்லியல் சார்ந்த சின்னங்களுக்கு எதிராக செயல்படும் இடத்து அதற்குப் பிணை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தொல்பொருள் திணைக்களத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நாங்கள் பல வருடமாக செய்து வந்திருக்கின்றோம். நீதிமன்றங்களிலும் இது சம்பந்தமான விடயங்களை எடுத்து இருக்கின்றோம்.

ஆனால் இது ஒரு விசேட சட்டம். நாட்டிலே இருக்கின்ற எல்லா சட்டங்களிலும் பார்க்க இந்த சட்டத்தில் மட்டும் தான் பிணையே வழங்க முடியாது. மற்றது எவ்வளவு மோசமான குற்ற செயல்களில் இருக்கின்ற எல்லா சட்டங்களிலும் ஒரு நீதிமன்றம் பிணை வழங்க முடியாது என்று சொன்னால், அதற்கு மேலே இருக்கின்ற நீதிமன்ற, அல்லது அதற்கும் மேலே இருக்கிற நீதிமன்றத்திடம் நியாயாதிக்கம் கொடுக்கப்படும்.

பயங்கரவாத தடை சட்டத்துக்கு கீழே கூட மேன் முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கலாம் என்ற ஏற்பாடு ஒரு திருத்தமாக கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

தொல்லியல் திணைக்களத்தின் உடைய ஒரு அத்தியட்சகர் ஒரு கல்லை இது தொல்லியல் அடையாளம் என பிரகடனப்படுத்தி விட்டால் அதைச் சேதப்படுத்திய குற்றத்துக்கு பிணையே கிடையாது.

நான் இதை ஏன் சொல்கின்றேன் என்றால் அந்த அளவிற்கு ஒரு விசேடமான அதிகாரங்களை தொல்லியல் திணைக்களத்திற்கு கொடுப்பதற்கான சட்டம் நாட்டிலே இருக்கிறது. அதன் காரணமாக நீதிமன்றங்களையும் அதை மீறி செயல்பட முடியாதவாறு இந்த திணைக்களம் முடக்கி வைத்திருக்கிறது.

இது உண்மையாக தொல்லியல் திணைக்களம் அல்ல, இது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை திணிப்பதற்காக உருவாக்கப்பட்ட நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு திணைக்களம். ஆகையாலே நாங்கள் இதுவரைக்கும் செய்த முயற்சிகள் பல பலனில்லாமல் போனதற்கான காரணமும் அதுவாக இருக்கிறது.

ஆகையினால் தொடர்ச்சியாக அதே வழியை மட்டும் பின்பற்றாமல் வேறு வழிகளிலேயும் தொல்லியல் திணைக்களத்துக்கு எதிரான எங்களுடைய முயற்சிகளை நாங்கள் எடுப்போம்.

இதைப் பற்றி நாங்கள் ஜனாதிபதியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் அண்மைக்காலத்திலும் கூட சொல்லி இருந்தோம். அதற்கெல்லாம் அவர்கள் சொல்கின்ற பதில் வடக்கு கிழக்கில் மாத்திரம் இந்த பிரச்சனை இல்லை இது நாடு பூராவும் இருக்கிறது.

அரசாங்க கட்சியில் இருக்கின்றவர்கள் கூட தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக பாராளுமன்றத்திலே பல விடயங்களை எழுப்பி இருக்கின்றார்கள். ஆனால் அது ஒரு வகையானது.

வடக்கு கிழக்கிலே தொல்லியல் திணைக்களம் செய்கின்ற செயற்பாடு வேறு வகையான ஒரு செயற்பாடு. அங்கே இருக்கின்ற குடிப்பரம்பலை மாற்றி அமைப்பதற்கு, அங்கே பெரும்பான்மையாக வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை திணிப்பதற்குமான ஒரே நோக்கத்தோடு இந்த செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

ஆகையினால் இது சம்பந்தமாக மிகத் தீவிரமான நடவடிக்கைகளை வருகின்ற நாட்களிலே நாங்கள் எடுப்போம் – என்றார்.

Related posts

புறக்கோட்டை தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த யுவதி உயிரிழப்பு!

videodeepam

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – இலங்கை தொடர்பில் மார்ச் 24 இல் அவதானம்

videodeepam

மாவட்ட செயலகத்தில் வேலை செய்வதாக கூறி பெண் ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்த முயற்சித்த பொலிஸ் அதிகாரி.

videodeepam