deepamnews
இலங்கை

போராளிகளைப் பற்றிப் பேசும் அருகதை தமிழ் காங்கிரசுக்கு இல்லை

எந்தவொரு போராளிகளைப் பற்றிக் கதைப்பதற்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அருகதை கிடையாது என்று ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் தியாகி திலீபனின் நினைவேந்தலின் போது ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பாக, தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“தியாகி திலீபனின் நினைவேந்தலின் போது தங்களின் பிழைகளை மூடி மறைக்க அவசர அவசரமாக ஊடக சந்திப்பினை நடத்தி சுகாஸ் பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார்.

பொய்களை கூறி முன்னாள் போராளிகள் மீது அவதூறை பரப்பியமைக்கு அவருக்கு எமது கண்டனங்களையும் தெரிவிக்கிறோம்

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் காவடி வரும் போது எந்த குழப்பமும் ஏற்படவில்லை. அகில இலங்கை தமிழ் காங்கிரசினர் தான் குழப்பங்களை ஏற்படுத்தினார்கள்.

காவடியை இங்கே இறக்க முடியாது என அடாவடி செய்த பின்னரே குழப்பம் ஏற்பட்டது.

தாம் 06 ஆண்டுகளாக நினைவேந்தல் செய்து வருவதாக கூறுகிறார்கள்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2016ஆம் ஆண்டு தியாக தீபத்தின் நினைவிடத்தை முதலில் துப்பரவாக்கி முதல் முதல் நிகழ்வை நாங்கள் தான் செய்தோம்.

2017ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்காக நாம் அவ்விடத்தை துப்பரவு செய்யும் போது, அகில இலங்கை தமிழ் காங்கிரசினர் வந்து இரு தரப்பும் சேர்ந்து ஒன்றாக செய்வோம் என எங்களுடன் பேச்சுக்களை நடத்தினர்.

மறுநாள் கட்சி அலுவலகத்திற்கு எம்மை அழைத்து, கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கதைத்து நாங்கள் சம்மதம் தெரிவித்த பின்னரே இரு தரப்பினரும் சேர்ந்து 2017ஆம் ஆண்டு நினைவேந்தலை நாம் செய்தோம்.

2015ஆம் ஆண்டு எங்களை மஹிந்த உருவாக்கினார்  என்கிறார்கள். அவ்வாறாயின்  ஏன் 2017ஆம் ஆண்டு எங்களை அழைத்து பேச வேண்டும்?

2016ஆம் ஆண்டு நாங்கள் தனியே நினைவேந்தல் செய்தோம். 2017ஆம் ஆண்டு நாங்களும் தமிழ்க் காங்கிரசும் இணைந்து இரண்டாவது நினைவேந்தலை செய்தோம்.

2018ஆம் ஆண்டு மாநகர சபை செய்தது. அடுத்த இரண்டு வருடங்கள் நீதிமன்ற தடையுத்தரவு. இப்படி இருக்கையில் எப்படி 6 வருடங்கள் நினைவேந்தலை முன்னெடுத்ததாக சொல்கிறார்கள் ?

இவர்கள் தென்னிலங்கையில் உள்ள தமது சொத்துக்களை பாதுகாக்க யாழ்ப்பாணத்தில் மக்களை ஏமாற்றி அரசியல் செய்கிறார்கள்.

அவர்களின் சொத்துக்களை பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தேவை. அதற்கு போராளிகளின் தியாகங்கள் தேவை.

தலைவரின் சொல்லுக்கு செயல்வடிவம் கொடுத்தவர்கள் போராளிகள் , மாவீரர்கள். ஆகவே போராளிகளையே மாவீரர்களையோ கொச்சைப்படுத்த இவர்களுக்கு அதிகாரம் இல்லை.

எங்கள் மக்களுக்காக தன்னுயிரை நீத்த தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தவே வருகிறோம்.

நாங்கள் மஹிந்த ராஜபக்சவையோ கோட்டாவையோ  இரகசியமாக சந்திக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எங்களை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டது. நாங்கள் போனோம்.

அது ஊடகங்களுக்கும் தெரியும். ஒளித்து போகவில்லை.

சந்திப்பின் போது தேர்தலில் தமக்கு ஆதரவு தர கோரினார்கள்.  நாங்கள் போராளிகள் விடயங்கள் உட்பட சில பிரச்சனைகளை சொன்ன போது அவர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.

அதனால் நாம் சஜித்துக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்து யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு நடாத்தி அதனை பகிரங்கமாக தெரிவித்தோம். ” என்றும் அவர் மேலும் கூறினார்.

Related posts

சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் விற்பனை சந்தை இன்று ஆரம்பமானது

videodeepam

நாளை (23) முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வகுப்புகளுக்கு தடை

videodeepam

தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam