கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளின் நினைவஞ்சலி நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (21) உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
இதன் பிரதான நிகழ்வு பிள்ளையார் அடியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை தேவாலய பிரதம போதகர் ரோசான் மகேசன் தலைமையில் இடம்பெற்றது.
அங்கு உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டியும் இந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு ஆசீர்வாதம் வேண்டி விசேட வழிபாடுகள் பிரதம போதகரால் முன்னெடுக்கப்பட்டது.
உயிரிழந்த உறவுகளின் நினைவாக குண்டு வெடிப்பு இடம்பெற்ற மத்திய வீதியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இத்துடன் உயிரிழந்த உறவுகளுக்கு சீயோன் தேவாலயத்தில் குண்டு வெடித்த நேரத்தில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இங்கு நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லாசி வேண்டி விசேட வழிபாடுகள் இடம்பெற்றது.
சீயோன் தேவாலய குண்டுவெடிப்பில் 33 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பு இடம்பெற்ற இந்த சீயோன் தேவாலயம் இன்னும் புனரமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது