பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென இந்திய வான் எல்லைக்குள் நுழைந்ததால் இந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த பாகிஸ்தான் விமானம் சுமார் பத்து நிமிடங்கள் இந்திய வான்பரப்பில் இருந்துள்ளதுடன் விமானம் இந்தியாவுக்குள் நுழைந்தவுடன் இராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
லாகூரில் தரையிறங்க வேண்டிய பாகிஸ்தானைச் சேர்ந்த பயணிகள் விமானம் கனமழை காரணமாக தவறுதலாக இந்திய வான்பரப்புக்குள் நுழைந்த நிலையில், அதிகாரிகளின் அனுமதி பெற்று மாற்றுப்பாதையில் பத்திரமாக பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது.
மோசமான வானிலையால் விமானி பாதையைத் தவறவிட்ட நிலையில், விமானம் இந்திய வான்பரப்புக்குள் நுழைந்துள்ளதாக இந்திய விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி விளக்கமளித்த நிலையில் வான்பரப்பை பயன்படுத்திக்கொள்ள இந்திய அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர்.
அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க விமானி முயன்ற போதும் அவை வெற்றியளிக்காத காரணத்தினால் இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக விமானி தனது அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.
இதன்போது இந்திய வான்வெளியில் 20,000 அடி உயரத்திற்கு விமானிகள் விமானத்தை எடுத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய எல்லைப் பகுதியில் சுமார் பத்து நிமிடம் பறந்த பாகிஸ்தான் விமானம் 8.22 நிமிடத்தில் மீண்டும் தனது எல்லைப் பகுதிக்கு சென்றபோது விமானம் 23,000 அடி உயரத்தில் மணிக்கு 320 கிமீ வேகத்தில் பறந்து கொண்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.