ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது எனவும் ஜல்லிக்கட்டு தொடர்பில் தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லுபடியாகும் எனவும் இந்திய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்ச அரசியல் சாசன அமர்வில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு தொடரப்பட்ட மனுதாரர்கள் தரப்பில், முதலில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், பின்னர் தமிழக அரச தரப்பிலும் மத்திய அரசு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
சென்னை மெரினாவில் நடந்த போராட்டங்களை சுட்டிக்காட்டி, நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டின் கலாசாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி எனவும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொள்வதாகவும் ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசின் சட்டம் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.