அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக வழங்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் 65 லட்சம் ஊழியர்கள் இருக்கும் தனியார் துறைக்கு எந்த நிவாரணத்தையும் அறிவிக்கவில்லை. எனவே, வரவு – செலவு திட்ட நிவாரண சட்டத்தை கொண்டுவந்து தனியார் துறைக்கும் சம்பள அதிகரிப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
– இவ்வாறு ஜே .வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் ஹேரத் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
” ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான தன் பின்னர் மின் கண்டனம் நூற்றுக்கு 440 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், வரவு- செலவு திட்டத்தில் தனியார் துறை தொர்பாக எந்த ஏற்பாடுகளும் இல்லை. நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது அரச ஊழியர்களுடன் தனியார் ஊழியர்களும் பாதிக்கப்படுக்கின்றனர்.
அரசாங்கம் வரியை நூற்றுக்கு 18 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த வற் வரி அதிகரிப்பில் தனியார் துறையினரும் அடங்குகின்றனர். வற் வரி அதிகரிப்பின் மூலம் அரசாங்கம் 859 பில்லியன் ரூபாவை எதிர்பார்க்கிறது. அரசாங்கம் 65 லட்சம் தனியார் துறை ஊழியர்களிடமே இந்த தொனையை பெற்றுக்கொள்ள இருக்கிறது. ஆனால் தனியார் துறைக்கு எந்த நிவாரணமும் இல்லை.
2005 இல் வரவு- செலவு திட்டத்தில் வர- செலவு நிவாரண சட்டம் ஒன்று கொண்டுவந்து தனியார் துறைக்கு 1000 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. அதேபோன்று 2016இல் வரவு செலவு திட்ட நிவாரண சட்டம் கொண்டுவந்து 2500 ரூபாய் அதிகரிக்கப்பட்டது . எனவே இம்முறையும் அரசாங்கம் வரவு செலவு திட்ட நிவாரண சட்டத்தை கொண்டுவந்து தனியார் துறைக்கும் சம்பள அதிகரிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
தோட்டத்தொழிலாளர்களுக்கு 4 வருடங்களுக்கு 1000 ரூபாய் பெற்றுக்கொடுத்தோம். அதுவும் சில தோட்டங்களில் நீண்ட காலத்துக்கு பின்னரே வழங்கப்பட்டது. அதுவும் சில தோட்டங்களில் முறையாக வழங்கப்படுவதில்லை. ஆனால் இன்று ஆயிரம் ரூபாவில் நாள் ஒன்றுக்கான செலவை பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கிறது. அதனால் தோட்டத்தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2000 ரூபாவாவது வழங்க வேண்டும்.” – என்றார்.