தமிழ் மக்களின் நன்மை கருதி, தற்போது தமிழ் கட்சிகள் சேர்ந்தே பயணிக்க வேண்டும் எனவும் அதற்கு மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவத்தை ஏற்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற 6 பேரின் கூட்டணிக்கு மாவை சேனாதிராஜா தலைமை வகிப்பதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என கலந்துரையாடப்பட்டதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் சிரேஷ்ட உறுப்பினர் என்பதால், அதற்கு பொருத்தமானவர் எனவும் சி.வி. விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு விடயங்களை எடுத்துக்கூறும் விவகாரத்தை இணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், தனித்து போட்டியிட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் சிலர் கூறினாலும் மக்களின் நலன் கருதி இந்த காலகட்டத்தில் சேர்ந்து போவது தான் சிறந்தது என்ற முறையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல் அல்லவெனவும் உத்தியோகபூர்வ கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்து தமக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தமக்கு கடிதம் கிடைத்துள்ளதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.