deepamnews
இந்தியா

ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்க – மத்திய உள்துறை அமைச்சருக்கு காங்கிரஸ் அவசர கடிதம்

இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் எழுதியுள்ள கடித விவரம் வருமாறு: ”ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கடந்த 24ம் தேதி டெல்லி வந்தபோது அதிக அளவில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன. ராகுல் காந்தி Z+ பாதுகாப்பைப் பெற்றவர். ஆனால், அவருக்கு உரிய பாதுகாப்பை டெல்லி போலீசார் வழங்கவில்லை. காங்கிரஸ் தொண்டர்கள்தான் ராகுல் காந்திக்காக பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி அவரை பாதுகாத்தனர். டெல்லி போலீசார் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இந்திய ஒற்றுமை யாத்திரையில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பதை தடுக்கும் நோக்கில் புலனாய்வு அமைப்புகள் செயல்படுவது தெரியவந்துள்ளது. யாத்திரையில் பங்கேற்ற பலரிடம் புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி உள்ளனர். ஹரியாணா மாநில புலனாய்வு பிரிவினர் சிலர் இந்திய ஒற்றுமை யாத்திரைக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது தொடர்பாக கடந்த 23-ம் தேதி சோனா சிட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்.

நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக பாடுபட்ட இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகிய இரண்டு பிரதமர்களை தியாகம் செய்த கட்சி காங்கிரஸ். கடந்த 2013 மே 25ம் தேதி நடந்த நக்ஸல் பயங்கரவாத தாக்குதலில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்களை நாங்கள் ஒட்டுமொத்தமாக இழந்தோம்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை வரும் ஜனவரி 3-ம் தேதி மீண்டும் தொடங்க இருக்கிறது. மிகவும் பதற்றமான பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இந்த பாத யாத்திரை செல்ல இருக்கிறது. Z+ பாதுகாப்பைப் பெற்றவர் என்பதால் ராகுல் காந்திக்கு போதுமான பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அவரோடு பாத யாத்திரையில் பங்கேற்க இருக்கும் தலைவர்கள் தொண்டர்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்” என கே.சி. வேணுகோபால் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

மோடியின் அவரது வசீகரத்துக்காகவே மக்கள் வாக்களித்தனர் – தேசியவாத கட்சியின் தலைவர் தெரிவிப்பு  

videodeepam

மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி காலமானார்

videodeepam

ஆறு தமிழக கடற்றொழிலாளர்கள் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

videodeepam