deepamnews
இந்தியா

ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகை போராட்டம்

ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “ஆளுநர் என்பவர் அரசியல் சாசனத்தின்படி நடந்து கொள்ள வேண்டும். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசியலமைப்பில் எழுதி இருக்கக்கூடிய நிலையில், இந்த ஆளுநர் மதச்சார்பற்ற நாடே இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசாங்கம் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். இல்லையென்றால் திருப்பி அனுப்ப வேண்டும் அல்லது திருத்தம் கேட்க வேண்டும். அதைச் செய்யாமல் மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல குடும்பங்களில் உயிர் பறிபோய் கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில் ரம்மி நிறுவனங்களோடு ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தமிழ்நாடு என்ற பெயர் அவருக்கு கசக்கும் பெயராக மாறியிருக்கிறது. ஆளுநர் கொடுத்த விளக்கம் அவர் சொன்னதை விட மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது.

தமிழை அங்கீகரிக்க மாட்டேன், தமிழ்நாட்டை அங்கீகரிக்க மாட்டேன் என்றால் அவர் ஆளுநராக இருப்பதற்கு அறவே தகுதி கிடையாது. மத்திய அரசு இப்படிப்பட்ட ஆளுநர்களை பயன்படுத்திக் கொண்டு பாஜக ஆளாத மாநிலங்களில் நயவஞ்சக ஆட்சியை நடத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாத, தமிழ்நாடு அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளாத ஓர் ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஒரு வேலை திரும்பப் பெறவில்லை என்றால், இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி ஆளுநர் தேவை இல்லை என்று சொல்லக்கூடிய அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்” என்று அவர் கூறினார்.

Related posts

நடிகர் மயில்சாமி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார் – திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல்

videodeepam

உலகின் மிகவும் புகழ்பெற்ற தலைவராக நரேந்திர மோடி – ஆய்வு அறிக்கையில் தெரிவிப்பு

videodeepam

மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி காலமானார்

videodeepam