deepamnews
இலங்கை

வங்குரோத்து அடைந்த நாடு 2026 ஆம் ஆண்டளவில் மீண்டெழும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

தற்போதைய திட்டங்களுக்கு அமைய செயற்படும் பட்சத்தில், 2026 ஆம் ஆண்டாகும் போது வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும்  என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

நாட்டிற்காக தற்போது தாம் எடுக்கும் தீர்மானங்களின் முக்கியத்துவம் ஓரிரு வருடங்களில் பலருக்கு புரியும் என தனது உரையின் போது ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனேயே எதிர்கால பயணத்தை முன்னெடுக்க முடியும் எனவும் விமர்சனங்களை முன்வைப்போர் வேறு மாற்று முறைகள்  இருந்தால் முன்வைக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கடன் மறுசீரமைப்பு மாத்திரமே தற்போது எஞ்சியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டதுடன், மக்களின் பிரச்சினைகள் குறைந்து வருவதன் மூலம் தாம் பயணிக்கும் பாதை சரியானது என்றே தெரிவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை அதிகாரப்பகிர்வு தொடர்பிலும் ஜனாதிபதி தனது உரையின் போது கருத்து தெரிவித்தார்.

1977 ஆம் ஆண்டு இரா.சம்பந்தனும் தானும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டபோது, இருவருக்கும் பொதுவானதொரு கனவு இருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.  

இருவரும் பாராளுமன்றத்தில் இருக்கின்ற போதே இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிலைபேறான ஒரு தீர்வை வழங்குவதே அந்த கனவு என ஜனாதிபதி கூறினார்.

”அந்தக் கனவு பற்றி அன்று முதல் இன்று வரை கலந்துரையாடுகின்றோம். முயற்சி செய்கின்றோம். முன்னைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆனாலும் இம்முறை எப்படியாவது அதனை வெற்றியடையச் செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம். அதற்காக உங்கள் அனைவரது ஒத்துழைப்பினையும் எதிர்பார்க்கின்றோம். வடக்கு, கிழக்கு யுத்தம் முழு நாட்டையும் பாதித்தது.  முழுமையான வடக்கு மாகாணமும் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பிரதேசங்களும் யுத்தம் காரணமாக பாரிய துன்பங்களை அனுபவித்தன. அப்பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாக கூடுதலான கவனம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்வோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வடக்கில் காணிப்பிரச்சினை இருப்பதை அறிந்துள்ள தாம், அவற்றை விடுவிக்க தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியுள்ளதாகவும் கூறினார்.

யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால் காடுகளாக்கப்பட்ட கிராமங்களின் பல காணிகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் பெயரிடப்பட்டுள்ளன. தற்போது யுத்தம் முடிவடைந்துள்ள போதும், தமக்கு உரித்தான பல காணிகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால், மக்களுக்கு பாரியளவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Related posts

காரைநகரில் ஆணொருவர் உயிர்மாய்ப்பு!

videodeepam

வடகிழக்கில் பௌத்தத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும் ரணில் – விமல் வீரவன்ச தெரிவிப்பு

videodeepam

இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்கும் சீனா – இந்திய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க திட்டம்

videodeepam