நீங்கள் சேற்றை வாரி இறைக்க இறைக்க தாமரை மலரும்” என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாநிலங்களவையில் உரையாற்றினார். அதானி விவகாரத்தில் விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையான கோஷங்களுக்கு இடையே பிரதமர் மோடி உரையாற்றினார். ‘மோடியும் அதானியும் கூட்டு’ (மோடி, அதானி பாய், பாய்) என்று பொருள்படும் வகையில் எதிர்க்கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.
பிரதமர் மோடி தனது உரையில் பேசியது: “அவையில் சில உறுப்பினர்களின் நடத்தையும், அவர்களின் பேச்சு தொனியும் ஒட்டுமொத்த தேசத்திற்கே ஏமாற்றத்தை அளிக்கிறது. நான் அந்த நபர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். சேற்றை வாரி இறைக்க இறைக்க தாமரை மலரும். எதிர்க்கட்சிகள் சேற்றை வாரி இரைத்து தாமரையை வளரச் செய்வதால் நாங்கள் நன்றி கூறுகிறோம்.
மக்களுக்கு மத்திய அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜன் தன், ஆதார், மொபைல் இணைப்பு மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் பயனாளர்களின் உரிய கணக்குகளுக்கு சென்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எல்லாமே வாய்ஜாலம் தான். 2014 வரை நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு வங்கி சேவை வசதி இல்லை. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசு 48 கோடி வங்கிக் கணக்குகளை தொடங்கிக் கொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.