கொழும்பில் 8 உயர் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப் பெறப்பட்ட போதிலும், தேவைப்படும் போது, அரசாங்கம் ‘பயங்கரவாதச் செயல்கள்’ மீள நிகழாமல் தடுக்கும் வகையில், கூடுதல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயங்காது என்று அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
1955 ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ இரகசியச் சட்ட விதிகளின் கீழ், உயர் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்காக, சட்டவிரோத வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு, நாடு மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதன் மூலம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள் இழுத்துச் சென்ற பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ரிரான் அலஸ் ஆகியோருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன,
ஒரு அப்பாவி நாடாளுமன்ற உறுப்பினர் வீதியில் மிருகத்தனமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டபோது, நாடு உள்நாட்டிலும் உலக அளவிலும் அதிக அவமானங்களை எதிர்கொண்டதாகவும், மே 9 ஆம் திகதி அமைச்சர்களின் மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள வீடுகள், தனிப்பட்ட சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அன்றைய தினம் இலங்கையில் நடந்ததைக் கேட்ட, பார்த்த வெளிநாட்டினர் இப்போது, இலங்கைக்கு பயணம் செய்வது பாதுகாப்பானதா என்று நம்மிடம் கேட்கிறார்கள்.
விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது வீதியில் நிறுத்தப்படமாட்டார்களா அல்லது தங்களுடைய வாகனங்களுக்கு தடையின்றி பெட்ரோல் கிடைக்குமா என்கிறார்கள்.
இதுதான் இலங்கை எதிர்கொண்டுள்ள களங்கம். அந்த வர்த்தமானியின் வெளியீடு அல்ல,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கமும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் தேவைப்பட்டால் பொருத்தமான சட்டங்களை அறிமுகப்படுத்துவார்கள் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.
உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் அமைச்சர் ரிரன் அலஸ் ஆகியோரினாலேயே தயாரிக்கப்பட்டது என்பதும், ஜனாதிபதி விக்ரமசிங்கவின் கையொப்பத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட வர்த்தமானியின் வரைவு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படாமலேயே கொடுக்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.