பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் பிரச்சாரம், ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை தொடர உள்ளது.
“காங்கேசன்துறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கையெழுத்துப் பிரசார நடவடிக்கை, அனுராதபுர, குருநாகல, காலி, கொழும்பு, அக்குறணை, கண்டி, தம்புள்ளை, மாத்தளை, பொலன்னறுவை ஆகிய இடங்களை சென்றடைந்துள்ளதாகவும், ஒக்டோபர் 5ஆம் திகதி அம்பாந்தோட்டையில் நிறைவடைவதற்கு முன்னர் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு முழுவதும் பயணிக்கும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
முதல்முறையாக, ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன இந்த நடமாடும் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு ஆதரவு வழங்கியதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஆதரவு அளித்தது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த மாதங்களில், தொழிற்சங்கவாதிகள் மற்றும் இடதுசாரி செயற்பாட்டாளர்களுக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்க அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டார்.
இப்போது, அவரது ஆட்சி அடக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ளது, இழிவான பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி, செயற்பாட்டாளர்களை நீண்ட காலத்திற்கு விசாரணையின்றி தடுத்து வைத்துள்ளது.” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.