எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, உள்ளூராட்சி சபைகள்/நகர சபைகள் மற்றும் நகர சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 இல் இருந்து 4000 ஆக குறைக்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை ஒரு தலைவருக்கு வழங்காமல், அவை தலைவர் அடங்கிய குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் உரிய திருத்தங்களை உள்ளடக்கி சட்ட வரைவு தயாரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிபுணர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசியல் ஊழல்களுக்கு முக்கிய காரணம் விருப்புரிமை முறையே என ஜனாதிபதி தெரிவித்தார்.
கலப்பு முறை அல்லது பட்டியல் முறை தொடர்பில் விருப்பு வெறுப்புகள் அற்ற தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, நாடாளுமன்ற வாக்களிப்பு முறை தொடர்பில் தீர்மானிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறும் பரிந்துரைத்துள்ளார்.
இதன்படி, ஜூன்-ஜூலைக்குள் முடிவெடுக்க முடியாவிட்டால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.