deepamnews
இலங்கை

வியட்நாமில் உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு 30 இலட்சம் ரூபா வரையில் தேவை!

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கல்வயலை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த கிரிதரனின் மனைவி கருத்து தெரிவிக்கும் போது, அங்கிருந்து கணவரின் உடலை இங்கே கொண்டு வர 30 இலட்சம் ரூபா வரையில் தேவைப்படும் என தெரிவித்து என்னிடம் கையொப்பம் கேட்டனர்.

அந்த 30 இலட்சம் இருக்குமாயின் நான் ஏன் என்னுடைய கணவரை கடல் கடந்து அனுப்ப வேண்டும். நான்கு பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும், கடன் பிரச்சினைகளும் இருக்கின்றன அவற்றிலிருந்து மீள வேண்டும் என தெரிவித்தே கடல் கடந்து என்னுடைய கணவர் சென்றார். இப்படி நடக்குமென நான் எதிர்பார்க்கவில்லை.

கடைசியாக நான் அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை, அப்பா இல்லை என்பதை எனது குழந்தைகளுக்கு காட்டுவதற்காக அவரது உடலை எம்மிடம் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் என கதறியழுத வண்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் படகு பிடிப்பட்ட பின்னர் தான் அடுத்த நாள் தொலைபேசியில் அழைத்து கூறினார், எந்தவொரு பிரச்சினையும் இல்லை, யோசிக்க வேண்டாம், நான் அழைப்பினை ஏற்படுத்திய தொலைபேசி எண்ணுக்கு திருப்பி அழைக்க வேண்டாம் என்று.

இதை தான் கடைசியாக கூறினார். அதன் பின்னர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. கடைசியாக அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை தான் நான் அறிந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி ரணில் மாலைதீவுக்கு பயணம்.

videodeepam

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன விபத்தில் உயிரிழப்பு

videodeepam

படகு கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் பலி திருமலையில் துயரம்.

videodeepam