deepamnews
இலங்கை

வடக்கு, கிழக்கில் கால்நடைகளின் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு – காரணத்தை கண்டறிய மாதிரிகள் பரிசோதனை

இலங்கையில் கடந்த இரண்டு தினங்களில் வடக்கு, கிழக்கு  மாகாணங்களில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

உயிரிழந்த கால்நடைகளை இரசாயன பரிசோதனைகளுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது.

இரு மாகாணங்களிலும் கடந்த இரு தினங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளமையை கால்நடை வைத்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்தியாவை தாக்கிய சூறாவளியின் தாக்கம் மற்றும் குளிரான காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு கடற்கரையை அன்மித்த பகுதிகளில் ஏற்பட்ட அதிகக் குளிரினால் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக விவசாய , வனஜீவராசிகள் மற்றும்  வனப் பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும்,  இந்த கால்நடைகளின் உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் நோய்க்காரணிகள் தாக்கம் செலுத்தியுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு உயிரிழந்த விலங்குகளின் மாதிரிகள் கால்நடை  வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்தினால் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளன.

உயிரிழந்த கால்நடைகளின் இறைச்சியை உணவிற்காக பயன்படுத்தவோ, வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லவோ கூடாது எனவும் அதனை தடுக்குமாறும் விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனிடையே, வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் உயிரிழக்கின்றமையால், பொது சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியை கொண்டு செலவதற்கு தடை விதிக்கப்பட்டு ஜனாதிபதியின் ஊடக பிரிவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – வந்தாறுமூலை அரச கால்நடை வைத்திய பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி 4, ஆலையடிக்குடா, சேரடி, கரச்சைவெட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று  20-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

இதனிடையே, கிளிநொச்சி – பூநகரி, குடமுறுத்தி பகுதியில்  22 கால்நடைகளும் முட்கொம்பன் பகுதியில் 30-க்கும்  மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்ட விலங்கு புலனாய்வு திணைக்களத்தின் வைத்திய குழுவினர் உயிரிழந்த கால்நடைகளின் உடல் மாதிரிகளை, பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்தின் குழுவினரிடம் வழங்குவதற்காக சேகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.  

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட  கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

யாழ்ப்பாணத்திலும் கால்நடைகளின் இறப்பு பதிவாகியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை – தோப்பூரிலும் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த கால்நடைகளை தோப்பூர் பிரதேச சபையினர் புதைக்க நடவடிக்கை எடுத்தனர்.  

இதனிடையே, கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமாலி கொத்தலாவெலவின் பணிப்புரைக்கு அமைய பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்தின் குழுவொன்று இது குறித்து ஆராய்வதற்காக முல்லைத்தீவு  மாவட்ட விலங்கு புலனாய்வு நிலைய கால்நடை உற்பத்தி சுகாதார நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

Related posts

ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இலங்கை தொடர்பில் கூட்டறிக்கை

videodeepam

அரசாங்கத்தின் வரிவிதிப்பினால் நடுத்தர வருமானம் பெறும் மக்கள் அதிகளவு பாதிப்பு – சித்தார்த்தன் விசனம்

videodeepam

வரிக் கொள்கை மாற்றப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை -15 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

videodeepam