ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏனையக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கும் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் நாளில் எம்மோடு யார் இருக்கிறார்கள் என்பது தெரியவரும் எனவும் தெரிவித்தார்.
அநுராதபுரத்தின் ஜெய ஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளை மேற்கொண்டப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் நானும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் இணைந்து செயற்பட தீர்மானித்தோம். அப்போது எனக்கு ஜனாதிபதி பதவியும் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதிவியும் கிடைத்தது. எனக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்கள். என்னை அவமதித்தார்கள். என்னை அவமதித்து எனக்கு எதிராக சேறுபூசியவர்களுக்கு இப்போது ஜனாதிபதி பதவியும் இல்லை பிரதமர் பதவியும் இல்லை என்றார்.
கூட்டணி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் நாளில் எம்மோடு யார் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
எமது கட்சியை விட்டுச் சிலர் சென்றுவிட்டார்கள் என எமது கட்சிக்குள் எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படவில்லை. கட்சியில் ஏற்பட்டிருந்த வெற்றிடங்களுக்கு திறமையான, அறிவார்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளையே தற்போது செய்து வருகிறோம். ஜனவரி முதல் மக்களுக்கு எமது புதிய வேலைத்திட்டங்களை அறிவிக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.