பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் நேற்று அதிகாலையில் காலமானார்.
இதையடுத்து இன்று மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த அரச நிகழ்வுகள் அனைத்து நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முன்னதாக திட்டமிட்டபடி இந்த விழாவில் காணொளி தொழிநுட்பம் ஊடாக பிரதமர் மோடி பங்கேற்றார்.
தனது தாயாரின் இறுதி சடங்குகளை முடித்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அவர், மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக இயக்கப்படும் ஹவுரா-நியூ ஜல்பை குறி இடையேயான வந்தே பாரத் தொடருந்து சேவையை கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார்.
மேலும், 5,800 கோடி ரூபா மதிப்பில் நிறைவுற்ற பல்வேறு தொடருந்து திட்ட பணிகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், மேற்கு வங்காளத்தில் 7,800 கோடி ரூபா மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
தாயார் இறந்த துக்கம் ஒரு புறம் இருந்தாலும் சோகத்தை மறைத்து திட்டமிட்டப்படி அரச நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றமை குறித்து இந்திய ஊடகங்கள் முக்கியத்துவத்தை வழங்கியுள்ளன.