வேட்புமனு தாக்கலுக்கான தினம் அறிவிக்கப்பட்டவுடனேயே விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் சகல உள்ளுராட்சி மன்றங்களும் கலைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் எனினும் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையானது, தேர்தலுடன் தொடர்புடைய மோசடிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்டத்திற்கேற்ப தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளமைக்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். எவ்வாறிருப்பினும் தற்போது தேர்தலை அடிப்படையாகக் கொண்ட மோசடிகள் ஆரம்பித்துள்ளன. காரணம் அடுத்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் குறித்த அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மாநகரசபை, நகரசபை மற்றும் பிரதேசசபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் எவரும் இன்னும் பதவிவிலகவில்லை. அவர்கள் அரச வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை இன்னும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதனை அங்கீகரிக்க முடியாது.
வேட்புமனு தாக்கல் அறிவிக்கப்பட்டவுடனேயே விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் சகல உள்ளுராட்சி மன்றங்களும் கலைக்கப்பட வேண்டும். ஆனால் அமைச்சரால் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. எனவே 18 ஆம் திகதி தற்போது பதவிகளிலுள்ளவர்களே வேட்புமனு தாக்கல் செய்வார்கள். அது மாத்திரமின்றி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கும் தமக்கான சலுகைகளைப் பயன்படுத்துவார்கள்.
உள்ளுராட்சிமன்றங்கள் கலைக்கப்படாவிட்டால் தேர்தல் இடம்பெறும் வரை இவர்களுக்கான சம்பளம் , ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் இதர சலுகைகளையும் வழங்க வேண்டும். பணம் இல்லை என்று அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு அநாவசிய செலவுகள் தவிர்க்கப்பட வேண்டும். தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பில் அவதானம் செலுத்துவதோடு, சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் ஆலோசனை வழங்குமாறு கோருகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.