தென் கொரிய பிரஜைகளுக்கு குறுகியகால விசா வழங்குவதை சீனா இடைநிறுத்தியுள்ளது.
சீனப் பயணிகளுக்கு தென் கொரியா கட்டுப்பாடுகளை விதித்தமைக்கு பதிலடியாக இத்தீர்மானத்தை சீனா மேற்கொண்டுள்ளது.
தென் கொரியாவின் சோல் நகரிலுள்ள சீனத் தூதரகம் இது தொடர்பாக இன்று தெரிவிக்கையில், ‘கொரிய பிரஜைகளுக்கு குறுகிய கால விசா வழங்குவதை கொரியாவிலுள்ள சீனத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூததரகங்கள் இடைநிறுத்தவுள்ளன. சீனா மீதான பாரபட்சமான கட்டுப்பாடுகளை தென் கொரியா நீக்குவதற்கு அமைய இந்நடவடிக்கையில் மாற்றங்கள் செய்யப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜப்பானுக்கு எதிராகவும் இதுபோன்ற நடவடிக்கையை சீனா அமுல்படுத்தியுள்ளதாக ஜப்பானின் கியோடோ செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
கொவிட்19 பரவல் கட்டுப்பாட்டில், பூச்சிய கொவிட் கொள்கையை கடைபிடித்த சீனா, அதை கைவிட்டுள்ளது. 3 வருடங்களின் பின் தனது எல்லையை சீனா நேற்றுமுன்தினம் முதல் திறந்துவிட்டுள்ளது.
இதனால், பெரும் எண்ணிக்கையான சீன மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்குத் தயாராகும் நிலையில், சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை பல நாடுகள் அறிவித்துள்ளன. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.